Pages

Total Pageviews

Wednesday, July 19, 2017

Vikram Vedha - Tamil Film



Cast - R Madhavan,Vijay Sethupathy,Varalaxmi Sarathkumar,Shraddha Srinath
Directed by Pushkar Gayathri

Produced by S Sashikanth

Music Composed by Sam C S

Cinematogrtaphy by P S Vinod

scheduled to be released on Friday July 21,2017

விக்ரம் வேதா திரை விமர்சனம் - Vikram Vedha movie review



தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்கள் என்பதே அரிதான விஷயம், அதிலும் கணவன் மனைவி இருவரும் இயக்குனர்களாக இருப்பது ரொம்பவே அபூர்வம். 'ஓரம் போ', 'வ' ஆகிய படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிடினும், மாறுபட்ட விமர்சனங்களே வந்தாலும் கூட தங்களுக்கென ஒரு தனித்துவமான மேக்கிங் ஸ்டைலை கொண்டவர்கள் இரட்டை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி. சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்தே, நல்ல கதையாக இருந்தால் 'ஆயுத எழுத்து', 'அன்பே சிவம்', 'ரங் தே பசந்தி' போன்ற படங்களில் பல ஹீரோக்களில் ஒருவராக நடிக்க தயங்கிடாதவர் மாதவன். அதே போல, தான் நடிப்பது என்ன வேடமாக இருந்தாலும், தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடித்திட வேண்டுமென நினைப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் சேர்ந்து புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் டிரைலரே அவ்வளவு மிரட்டலாக இருந்தது; படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்தது! இன்று இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கிறது? தொடர்ந்து படியுங்கள்.

தலைப்பில் உள்ள விக்கிரமாதித்தியன்-வேதாளம் கதையைப் போல, யார் கையிலும் சிக்காத ஒரு கேங்ஸ்டரையும் அவனை எப்படியாவது பிடிக்க நினைக்கும் காவல் அதிகாரியையும் பற்றிய ஆக்ஷன் த்ரில்லரே 'விக்ரம் வேதா'. படத்தின் அட்டகாசமான டைட்டில் கார்டில் ஆரம்பித்தே, படம் எதனை சுற்றி நகரவிருக்கிறது என்பதை சொல்லி ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்திவிடுகிறார்கள் இயக்குனர்கள். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், படத்தில் இருக்கும் ஏதோவொரு சின்ன விஷயமும் கூட ரசிகர்கள் பார்வையில் குறையின்றி தோன்ற வேண்டுமென ரொம்பவே . அதுவே, படத்தின் நம்பகத்தன்மையையும் பல மடங்கு கூட்டியிருக்கிறது. தடயவியல் அறிக்கையில் எந்த சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக என்கவுண்ட்டர் முடிந்த பின் அந்த இடத்தில் காவல் அதிகாரி விக்ரம் செய்யும் மாற்றங்கள், அபார்ட்மெண்ட் குழந்தைகள் மூலம் போதை மருந்தை இடம் மாற்றுவது குறித்த விவரங்களில் ஆரம்பித்து, படத்தில் பலரும் பேசும் மெட்ராஸ் பாஷையை பிசிறில்லாமல் காட்ட நினைத்திருப்பது வரை படக்குழுவினரின் அந்த முயற்சி நிறையவே தெரிகிறது.

வலுவான பாத்திர படைப்பு, அந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் வசனங்கள் மற்றும் பொருத்தமான நடிகர் தேர்வு - இவை மூன்றையும் சரியாக செய்தாலே ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்குவதில் முக்கால்வாசி வேலை முடிந்துவிடும். அந்த வகையில், படத்தின் முதன்மை கதாபாத்திரங்களையும் அவர்களின் செயல்களின் விளைவையும் வைத்தே திரைக்கதை நகரும்படி செய்ததில் 'விக்ரம் வேதா' மிகச்சிறப்பான படமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் விக்ரம் முன் ஒரு கேள்வியை வைத்துவிட்டு வேதா காணாமல் போவதும், அதற்கான பதிலை கண்டுபிடித்து வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க விக்ரம் முற்படுவதும் என படம் முழுக்கவே விக்ரமுக்கும் வேதாவுக்கும் இடையேயான ஆடு-புலி ஆட்டமும் ரொம்பவே சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது. விக்ரமிற்கும் பிரியாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளும், அவர்களது தொழில் சார்ந்த வாக்குவாதங்களும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் மிக முக்கியமான பிளஸ் பாய்ண்ட், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் மிக எளிமையாக வார்த்தைகளில் விவரிக்கும் அற்புதமான வசனங்கள். 'காந்தியோட அப்பா காந்தியா? காந்தியை சுட்டு கொன்ன கோட்சே பையன் கோட்சேயா?', 'வாலு இருக்குங்கிறதுக்காக, எலியும் பூனையும் ஒண்ணாயிடுமா?', 'பாதி போலீஸ் ஆகுறதுக்குள்ள, முழு கிரிமினல்..', 'செத்தவன் பையனை ஸ்கூல்ல சேர்க்குற அளவு சென்டிமென்ட்டா?' என்கிற கேள்விக்கு 'ஒரு வெங்காய சென்டிமென்ட்டும் இல்ல.. ஒரு கிரிமினல் இடத்துல, இன்னொரு கிரிமினல் முளைக்க வேணாம்ன்னுதான்' என்கிற பதில் என படத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே கூர்மையானதாக இருக்கிறது!

விக்ரம் கதாபாத்திரத்தில் செம ஸ்டைலான போலீஸாக, கச்சிதமாக பொருந்துகிறார் மாதவன். பல காட்சிகளில் எதிராளியை அதிகம் பேசவிட்டு தான் அடக்கியே வாசிக்கும் இப்படியொரு கதாபாத்திரத்தில் கவனம் ஈர்ப்பது, எத்தனை கடினம்! படத்தின் இரு துருவங்களில் ஒருவரான இவர், தன் பங்கினை மிக சிறப்பாக செய்துள்ளார். தன்னை விட ஜூனியர் ஹீரோவான ஒருவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்தற்காகவே, மாதவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! படத்தின் மிக முக்கிய நெகட்டிவ் பாத்திரத்தில் தோன்றி, படத்தின் உயிரைப் போல இருப்பவர் விஜய் சேதுபதி. எந்த காட்சியிலுமே நம் கண்களில் விஜய் சேதுபதி தெரியாதபடி, வேதா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து மொத்த படத்தையும் தானே தனியாளாக ஆட்சி செய்கிறார் இந்த நடிப்பு ராட்சஷன். 'ஒத்துக்கிறேன் சார், நீங்க தான் பெரிய ஆளு... நீங்க 18, நான் 16 தான்' என போலீஸிடமே நக்கலாக பேசுவது, தம்பியை திட்டிவிட்டு பின் விளையாடி சமாதானப்படுத்தி முத்தம் வாங்குவது, 'உன் அடையாளம் எதுன்னு புரிஞ்சுக்கோ, நல்லா படி' என அறிவுறுத்துவது, தன்னைக் காப்பாற்றுவதற்காக ஆஃப்-பாயில் சாகத் துணியும்பொழுது 'அவன் தப்பிச்சிடுவான்' என துக்கத்தில் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வது, தனது வக்கீலிடம் மன்னிப்பு கேட்டு தன்னைப் பற்றி உடைந்து பேசுவது, 'மரியாதையா, 50% கட்டிட்டுங்க சார்' என சிரித்துக்கொண்டே ரவியை மிரட்டுவது, 'ஒரு பிரச்சினைன்னா, பிரச்சினையைப் பார்க்காத... பிரச்சினையோட காரணத்தைப் பாரு' என நண்பனிடம் யுத்த தந்திரம் பேசுவது, 'முட்டை ஒடைஞ்சிருச்சு, முட்டை ஒடைஞ்சிருச்சுன்னு பொலம்பாம.. அந்த ஒடைஞ்ச முட்டையில, எப்படி ஆம்லெட் போடுறதுன்னு கத்துக்கணும்டா' என தம்பியை தேற்றுவது, 'அவங்களுக்கு உன் மேல காண்டுன்னா, நீ போய் சண்டை போடு சார்.. நான் ரெஸ்ட் எடுக்குறேன்' என கிண்டலடிப்பது என தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பட்டையை கிளப்புகிறார் விஜய் சேதுபதி. வேதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரம், தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும்; அந்தளவிற்கு அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. எந்த வேடமாக இருந்தாலும் சரி, ஒரு 'வரம் வாங்கி வந்த' கலைஞனைப் போல் அதில் மிக சுலபமாக வெற்றி காணும் இந்த மனிதரைப் பார்த்தால் சில சமயங்களில் மலைப்பாக இருக்கிறது! வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரங்கள் போலன்றி, கதையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நன்றாக நடித்துள்ளார் ஷாரதா ஸ்ரீநாத். கதிர், வரலக்ஷ்மி சரத்குமார், ராஜ் குமார் மற்றும் பிரேம் உட்பட (மற்ற காவல் அதிகாரிகளாக நடித்தவர்கள் சேர்த்து) அனைத்து குணச்சித்திர நடிகர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

புஷ்கர்-காயத்ரி இருவருமே சிறந்த இசை ரசனை உடையவர்கள் என்பது, அவர்களது முந்தைய படங்களின் ஆல்பங்களைப் பார்த்தாலே தெரியும். 'விக்ரம் வேதா' படத்திலும், சாம்.C.S இசையில் பாடல்கள் பிரமாதமாக உள்ளது. பாடல்களை விட, பின்னணி இசை இன்னும் அதிரடியாக படத்தின் இதயத் துடிப்பைப் போல அமைந்துள்ளது. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் அவர்களின் படத்தொகுப்பும் இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கு வலு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. படத்தின் ஒலி வடிவமைப்பு துறையின் பங்கும், அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 'தமிழ்ப்படம்', 'வ', 'காதலில் சொதப்புவது எப்படி', 'காவியத் தலைவன்', 'இறுதி சுற்று', 'வாயை மூடி பேசவும்' என தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை ஆதரிக்கும், நல்ல திரைப்படங்கள் வர வழிவகுக்கும் 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' சஷிகாந்த் போன்ற தயாரிப்பாளர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்!

'விக்ரம் வேதா' - இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று! தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள ஆக்ஷன் கிரைம் த்ரில்லர்களில் மிக சிறந்தவையான 'காக்க காக்க', 'குருதிப் புனல்', 'அஞ்சாதே', 'தனி ஒருவன்' போன்ற திரைப்படங்களின் பட்டியலில் 'விக்ரம் வேதா' நிச்சயம் இடம்பிடிக்கும்!

No comments:

Post a Comment